தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. இவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் இறந்த பிறகு இவருடைய தொண்டர் ஒருவர் தஞ்சாவூரில் கோவில் ஒன்றை கட்டி இருந்தார். இன்றளவும் தினமும் அந்த கோவிலில் ஜெயலலிதாவிற்காக பூஜைகள் நடத்தி வருகிறார். இதேபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துவருகிறது. பாஜக கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வராக அங்கு ஆட்சி செய்துவருகிறார். 2020ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் மோடியும் துவங்கி வைத்தனர். தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகிறது.

இந்த ராமர் கோவில் கட்ட ஆரம்பித்த நாளிலேயே மவுரியா கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்த 32 வயதான பிரபாகர் மவுரியா என்பவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்ட தொடங்கி இருந்தார். ஏழு லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டி முடித்து இப்போது தினமும் இருமுறை யோகி ஆதித்யநாத்துக்கு பூஜைகள் செய்து வருகிறார்.

20 அடி உயர யோகி ஆதித்யநாத் சிலை அமைத்து அந்த சிலைக்கு பின்புறம் வில், அம்பை யோகி ஆதித்யநாத் தாங்கி நிற்பதை போல சிலையாக வடிவமைத்துள்ளார். தான் ஒரு மிகப்பெரிய யோகி ஆதித்யநாத் சீடன் என்றும், ராமர் கோவிலை கட்டும் நபருக்காக தான் கோவில் கட்டுவதாக வேண்டி இருந்தேன் என்றும், யோகி ஆதித்யநாத் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றியதால் அவருக்காக கோவில் கட்டிவிட்டேன் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
