என்னைக்கும் யாரையும் உருவத்தை வைத்து மட்டும் எடை போடதீங்க. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை நீண்ட ரயில் பயணம், மூன்று நாள் பயணிக்க வேண்டி இருந்தது. அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், டிக்கெட் புக் பண்ணவும் முடியல. ஜெனரல் கம்பார்ட்மெண்டில் வரவேண்டிய சூழல். எப்படியோ பல்லைக்கடித்துக்கொண்டு பயணித்தேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது தங்கமான மனுசங்க. அவங்க ஆடையில் தான் அழுக்கு வாசம் வந்ததே தவிர, ஒருவர் கூட தவறான எண்ணத்தில் அணுகவில்லை. அப்படிப்பட்ட மனிதர்களை கடந்து வந்த எனக்கு, என் தோழியின் அனுபவம் சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
அவரும் வேலை தொடர்பா கோவை சென்றுவிட்டு, பேருந்தில் ஊருக்கு திரும்பி வந்துட்டு இருந்துருக்காங்க. பகல் நேரம் சரியான அலைச்சல், இரவு பயணத்தில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாம அயர்ந்து தூங்கி இருக்காங்க. திடீரென ஏதோ உடல் மேல் ஊர்வது போல, தெரிந்துள்ளது. தூக்க கலக்கத்தில் சரியாக என்னவென்று கணிக்க முடியவில்லை. மீண்டும் நல்ல தூக்கம். திரும்பவும் அதே போல ஒரு உணர்வு, திடுக்கிட்டு விழித்துப்பார்த்தால், ஒருவரின் கை ஆடைமீது உரசிக்கொண்டிருந்துள்ளது.
பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்கான், சின்ன வயசு அப்படி இருந்தும், தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணை சீண்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துருக்கு. நாம் தம்பி என்ற உறவு முறை வைத்து அழைப்போம். அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பது யாருக்கு தெரியும்? இந்த மாதிரியான நேரங்களில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். இவர்களை கண்டும் காணாமலும் விடுவதால் தான், பல தவறுகள் அரங்கேறுகிறது.
தானும் தைரியமாக தப்பாய் நடந்துகொள்ள முயல்வதோடு சகதோழர்களிடமும் பெருமையாய் பேசுவதனால், தனியாக வரும் பெண்களிடம் தைரியமாக தவறாக நடந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் விதைத்து விடுகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு பெண்கள் தைரியமாக சரியான நடவடிக்கை எடுக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு தவறாக நடந்துகொள்ள அவர்களுக்கு பயம் வரும்.