நண்பர் ஒருவர் ப்ராஜெக்ட் விஷயமாக பாரிஸ் சென்றிருந்தார். பாரிஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஈஃபில் டவர் தானே? அவர் ஊரில் இருந்து வந்த உடனே அவரிடம் முதலில் விசாரித்தது ஈஃபில் டவர் பற்றி தான். அப்படி என்னங்க அந்த கோபுரத்தின் சிறப்பு என வினாவிய போது, 'காலை எழுந்ததும் ஜன்னலை திறந்தால் முதலில் தென்படுவது ஈஃபில் டவர் தான். மாலை நேரத்தில் விளக்குடன் ஜொலிக்கும் காட்சி. பிரம்மாண்டமாக இருக்கும். அதன் அழகை சொல்ல வார்த்தை இல்லை. தினமும் பார்த்தேன், இருப்பினும் ஏதோ ஒரு வசீகரம் அதனிடம்.. அதனாலே எப்போது பார்த்தாலும் முதலில் பார்ப்பது போலவே ஒரு உணர்வு' என அவரது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
நண்பரிடம் எதற்காக ஈஃபில் டவர் கட்டினார்களாம்? கேட்ட போது, 1789 பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் விதமாக 1889 இல் உலகளாவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கண்காட்சியும் ஏற்பாடு செய்ய வேண்டும் அதேநேரம் படுத்துக்கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என அந்தநாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அப்போதுதான் நியூயார்க் நகரத்தில் இதே போன்று ஒரு உயரமான டவர் கட்டியுள்ளார்கள். அது அப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏன் நாம் அதை விட பெரிய கோபுரம் கட்டி உலக நாடுகளை ஈர்க்க கூடாது? என்ற போக்கில் உருவானது தான் ஈஃபில் டவர். 1889 இல் நினைத்தபடியே உலக அளவில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. வெறும் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட கோபுரம், எதிர்காலத்தில் நாட்டின் அடையாளமாகவே மாறிப்போனது.
இவ்ளோ பெரிய கோபுரத்தை சும்மாவா கட்டிவைத்திருப்பார்கள்? முதல் இரு அடுக்குகளில் உணவகங்கள் இருக்கும். மற்றபடி ரேடியோ அலைகளை மாற்றம் செய்ய உதவுகிறது. இந்த கட்டிடம் கட்டும் போது, மக்களே முதலில் இதனை வேண்டாம் என நிராகரித்துள்ளனர். ஆனால் இன்று மக்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களில் ஈஃபில் டவர் தான் முதலிடம். இன்று எல்லோராலும் ஒதுக்கப்படுபவர்கள் கூட ஒருநாள் எல்லோரும் பார்க்க ஆசைப்படும் ஈஃபில் டவர் போல நிமிர்ந்து நிற்க கூடும். ஆகையால் யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.