Relations

#OMG : இது ஏதேனும் மனநோயின் அறிகுறியா? மற்றவரைப் போலிருக்க மனம் விரும்பவில்லை

Feb 19 2020 07:01:00 PM

mental health

“மற்றவரைப் போலிருக்க மனம் விரும்பவில்லை. அதனாலேயே அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்க்கின்றனர். தனிமைச் சிறையில் அடைபட்டு கிடக்கிறேன். இது ஏதேனும் மனநோயின் அறிகுறியா?

கண்டிப்பாக மன நோயாக மாறும் வாய்ப்புள்ளது. காரணம் அடுத்தவரின் பார்வை அம்புகளுக்கு பயந்து நீங்கள் தனிமைச் சிறையில் வாடுவதற்கு நீங்களே பொறுப்பு. யாரும் உங்களை அப்படி இருக்க சொல்லவில்லை. விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஏன் சில நேரங்களில் பேசிய எல்லா வார்த்தைகளும் நம்மை வம்பில் மாட்டி விடும் வாய்ப்பும் உள்ளது. கூடுமான வரை உங்களுக்கு எதிராக பேசுபவர்களிடம் அல்லது உங்களை விமர்சிப்பவர்களிடம் பேச்சைக் குறைத்து நீங்கள் செயல் மூலம் அவர்களது எண்ணத்தை, பேச்சை தவறு என நிரூபிக்க முயலுங்கள்.

உங்களுக்கென ஒரு தனித்தன்மை உள்ளது. அதை ஆக்க பூர்வமாக பயன்படுத்தி, அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்குமாறு வாழ முயற்சி செய்யுங்கள். இவ்வுலகம் வெற்றி பெறும் வரை எவரையும் சீண்டவே சீண்டாது. தோல்வி பெறுபவர் எவரையும் வாழவும் விடாது. அது உலகத்தின் இயல்பு. நாம் தோல்வி அடையும் போது "இவனெல்லாம் உருப்பட மாட்டான்" என காது பட பேசும் இவ்வுலகம், நாம் வெற்றி பெறும் போது "எனக்கு அப்பவே தெரியும், அவன் சாதித்துக் காட்டுவான்" என அப்படியே உல்டாவாக தன் கருத்தைத் திரித்துக் கூறும். தோல்வி அடையும் போது எப்படி இருந்தீர்களோ அப்படியே வெற்றியை ருசிக்கும் போதும் இருங்கள்.

தோல்விக்காக தலை தாழவும் கூடாது. வெற்றிக்காக தலை வளரவும் கூடாது. இரண்டும் ஒன்றே என்ற எண்ணத்துடன், எவ்வித மன மாற்றமும் உங்களிடம் இல்லாதவாறு நடந்து கொண்டால், நீங்கள் வெற்றியை தொடர பீடு நடை போடத் தொடங்கி விட்டீர்கள் என பொருள். யாருக்கும் வேண்டாத நம்மை, எல்லோரும் விரும்பும் வண்ணம் செதுக்கும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. அதைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.